Tuesday, December 13, 2016

திருக்கார்த்திகை தெய்வங்கள்

திருக்கார்த்திகை என்றால் எல்லோருக்கும் திருவண்ணாமலை தீபத் திருவிழாதான் நினைவுக்கு வரும். இறைவன் ஜோதிப் பிழம்பாகத் தோன்றியதும், அம்பிகை ஐயனை வழிபட்டு இடப்பாகம் பெற்றதுமான திருவண்ணாமலை திருத்தலத்தில் அக்னி சொரூபமாகத் தோன்றிய ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபடுவதுபோல, திருக்கார்த்திகையில் விசேஷமாக விழாக் காணும் தெய்வங்களை இங்கே தரிசிக்கலாமே…
அர்த்தநாரீசுவரர்
ம்பிகைக்கு இறைவன் தனது உடலில் இடப்பாகத்தை அளித்து மாதொரு பாகனாக நின்ற நாள் கார்த்திகைத் திருநாளாகும். அந்த நாளின் இனிய மாலைவேளையில் சிவசக்தியர் இருவரும் ஓருடலாக நின்று களி நடனம் புரிய, அன்பர்கள் அதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருநாளில் மாலையில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் அவ்வேளையில், ஆலயத்துள் மலையை நோக்கியவாறு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தீபாராதனை செய்யப்படுகின்றது. அதேநேரத்தில், ஆலயத்துள்ளிருந்து அர்த்தநாரீசுவரர் வெளிவந்து கொடிமரத்தின் முன்பாகத் திருநடனம் புரிகின்றார். தீப்பந்தங்களின் நடுவில் நின்று ஆடும் அவரது நடனம் சில மணித்துளிகளே நிகழ்கிறது என்றாலும், கண்ணுக்கும் மனதுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும் சொல்லொணா நிம்மதியையும் அளிக்கின்றது.
அர்த்தநாரீசுவர திருக்கோலத்தை மாணிக்கவாசகர் தொன்மைக் கோலம் என்று போற்றுகின்றார்.


தோலும் துகிலும் குழையும்சுருள்தோடும்
பால்வெண்ணீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வலியும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

– என்பது அவர் அருளிய திருவாசகப் பாடலாகும்.
வலப்பக்கத்தில் தோலாடையும் இடப்பாகத்தில் பட்டாடையும் உடுத்தி, வலக்காதில் குழையும், இடது காதில் தோடும் அணிந்து, வலப் பகுதியில் வெண்ணீறு பூசி, இடது பாகத்தில் பசும் சாந்தாகிய மஞ்சள் பூசி பைங்கிளி ஏந்தியும், வலதுகையில் சூலமும் ஏந்தி மிகுந்த வலிமை கொண்ட சிவபெருமானின் கோலம் காலம் கடந்த தொன்மையானது என்பது இதன் பொருள். அர்த்தநாரீசுவர வடிவம் இறைவியின் விருப்பால் எழுந்தது. அர்த்தநாரீசுவர வடிவத்தைத் தொழுவதால் இல்லற வாழ்வும் செல்வச் செழிப்பும் உண்டாகும்.
விநாயகருக்கு சஷ்டி விரதம்!
கார்த்திகை தேய்பிறை பிரதமை தொடங்கி மார்கழித் திங்கள் வளர்பிறை சஷ்டி நாள் வரையிலான 21 நாட்கள் நோற்கப்படும் விரதம் விநாயக சஷ்டி எனப்படும் பிள்ளையார் நோன்பாகும்.
ஒரு சமயம் பாண்டவர்கள் பெருந்துன்பத்தை அடைந்து வருந்தியபோது கண்ணபிரான் இந்த விரதத்தைக் கடைப் பிடிக்கும்படி கூறினார். அதன்படி அவர்கள் இந்தப் பிள்ளையார் நோன்பை நோற்று, மேலான பலன்களைப் பெற்றனர். இந்த விரதம் கடைப்பிடிக்கும்போது ஸித்திகளைத் தருவதால் `ஸித்தி விநாயக விரதம்’ என்றும் அழைக்கப்படும்.
கார்த்திகைப் பெண்கள்
ட்சத்திரங்களை விண்மீன் என்பர். கடலில் மின்னிச் சதா சுழன்றுகொண்டிருக்கும் மீன்களைப் போல வானத்தில் பிரகாசித்துக்கொண்டு, இடம் பெயர்ந்துகொண்டே இருப்பதால், நட்சத்திரங்களை விண்மீன் என்று அழைக்கிறோம். கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை இலக்கியங்கள் அறுமீன் என்று அழைக்கின்றன. இந்த மீன்கள் வளர்த்த செல்வனாக இருப்பதால் முருகனுக்கும் ‘மீனவன்’ என்பது பெயராயிற்று.
கார்த்திகை போரைக் குறிக்கும் நட்சத்திரமாகும். வெற்றியை விரும்புபவர்கள், கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை  வணங்கி விரதமிருந்து வழிபடவேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
கார்த்திகேயன்
முருகப்பெருமானின் வளர்ப்புத் தாய்மார்களான கார்த்திகைப் பெண்கள், நம் இல்லங்களுக்கு வருவதைப் பெண்கள் விளக்கேற்றி வரவேற்பதே தீபத் திருவிழாவாகும் என்பர் சிலர். அவர்களுடன் முருகனும் வருகிறான். அவர்கள் நமக்கு வாழ்வில் வளமையையும் செல்வத்தையும் தருகின்றனர்.
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதாலும், கார்த்திகா வான துர்கையின் புதல்வன் ஆதலாலும், முருகனுக்குக் கார்த்தி கேயன் என்பது பெயராயிற்று. வடநாட்டில் முருகனைக் கார்த்திகேயன் என்ற பெயரில் வழிபடுகின்றனர். கிருத்திகா புத்திரன், கார்த்திகை மைந்தன் என்ற பெயர்களும் அவருக்கு வழங்கப்படுகின்றன.
கொற்றவை… தாரா பாத்திரம்…

கார்த்திகை நட்சத்திரத்தை ஜோதிட நூல்கள் அக்னி நட்சத்திரம் என்று கூறுகின்றன. இந்த நட்சத்திர மண்டலத்தைச் சூரியன் கடக்கும் வேளையில் வெயில் அதிகமாக இருக்கும். நெருப்புக்கோளக் கிரகமான சூரியனும் அக்னி வடிவான இந்த நட்சத்திரக் கூட்டமும் சேர்ந்திருக்கும் காலத்தில், வெயில் அதிகமாக இருக்கும். அதையே அக்னி நட்சத்திரம் என்று கூறுகின்றனர். அப்போது வெம்மையைக் குறைக்க வேண்டி, சிவலிங்கத்துக்கு மேல் ‘தாரா பாத்திரம்’ அமைப்பதும், தயிர் சாதம் நிவேதிப்பதும் நிகழும்.

கொற்றவையாகிய துர்கைக்கும் கார்த்திகா என்பது பெயர். துர்கை அக்னி மண்டலத்தில் வீற்றிருப்பவள். அக்னி மயமானவள். அதனால், அவள் கார்த்திகைப் பெண்களுக்கு நடுவே அக்னி துர்கையாக வீற்றிருக்கிறாள்.

யோக நரசிம்மர்
யோக நரசிம்ம சுவாமி வீற்றிருக்கும் திருப்பதிகளில் சோளிங்கர் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. சோளிங்கர் என அழைக்கப்படும் சோழசிங்கபுரம் நரசிம்மர் பெயரால் அமைந் ததாகும். இங்கு இரண்டு மலைகள் உள்ளன. பெரிய மலைமீது நரசிம்மசுவாமி யோக நரசிம்மராக விளங்குகிறார். பின் கரங்களில் சங்கு, சக்கரம் விளங்க, முன் கரங்களில் சிம்மகர்ண முத்திரைகளைக் கொண்டுள்ளார்.
இவருக்கு நேர் எதிரிலுள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் உள்ளார். இவர் நான்கு கரங்களுடன் சதுர்புஜ ஆஞ்சநேயராகக் காட்சியளிக்கின்றார். இது சிறந்த பிரார்த்தனைப் பதியாகும். இது முன்னாளில் `கடிகை’ என்று அழைக்கப் பட்டது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டது. கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர்.
சூரிய தேவன்
கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால், `விருச்சிக மாதம்’ என்பர். இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடாகும். சூரியனுக்கு இம்மாதத்தில் வழிபாடு செய்வதால் பரம்பரைச் சொத்துக்களால் பயன் உண்டாகும். அவை நம்மை விட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது. பார்வையின் சக்தி மேம்படும்.
கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவது, ஜோதிர் லிங்கங்களை வழிபடுவது முதலானவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கின்றன.
காஞ்சிபுரத்திலுள்ள ஜோதி லிங்கமான கச்சபேசப் பெருமானை வழிபடுவது, மிகுந்த பலன் தரும். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை களில் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் மூழ்கி, அதன் கரையிலுள்ள இஷ்டலிங்கப் பெருமானையும், கச்சபேசப் பெருமானையும் வழிபட்டால், நினைத்த காரியம் நல்லபடியே நடக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏராளமான மக்கள் கார்த்திகை ஞாயிறு வழிபாட்டை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவு மக்கள் கூடி வழிபடுகின்றனர். இம்மாதத்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கச்சபேசப் பெருமான் வீதிகளில் பவனி வந்து அருள்பாலிக்கின்றார்.

நாமும் புண்ணியம் மிகுந்த கார்த்திகை மாதத்தில், இந்தக் கார்த்திகை தெய்வங்களை வழிபடுவோம்; திருவருள் பெற்று சிறப்புற வாழ்வோம்.

No comments:

Post a Comment